தகைசால் தமிழர் விருது பணம் ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்கிறேன்- சங்கரய்யா

தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா.
தகைசால் தமிழர் விருது பணம் ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்கிறேன்- சங்கரய்யா
Published on

சென்னை

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், விருது மற்றும் பரிசுத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்குரியவர்களை அடையாளம் காண்பதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த குழுவால் தேர்வு செய்யப்படுபவருக்கு சுதந்திர தினத்தன்று தகைசால் தமிழர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும். மேலும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சங்கரய்யா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com