ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை திரும்பப்பெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை திரும்பப்பெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
Published on

பா.ஜ.க. அரசு ஏற்கனவே திரைத்துறையின் மீதான தனது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு மூலம் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவினையும் செயலற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசு முனைந்துள்ளது. ஆளும் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் எதிராக எழும் வெகுஜன மக்களின் உரிமைக்குரலை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் திரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் மத்திய அரசின் கொடுங்கோன்மைப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த வரைவில், திரைப்பட தணிக்கைக்குழு அனுமதித்த பிறகும் ஒரு திரைப்படத்தின் அனுமதி சான்றிதழில், மத்திய அரசு தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யவோ, சான்றிதழை ரத்து செய்யவோ, திரைப்படம் வெளியாகாமல் முடக்கவோ முடியும். இது திரைக்கலையின் மூச்சுக்குழலினை நசுக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்த சட்ட திருத்த வரைவை எதேச்சதிகாரப் போக்கோடு பா.ஜ.க. அரசு சட்டமாக்க முனைந்தால் அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும் ஓரணியில் திரண்டு தனது வலுவான எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் திரைத்துறையினருடன் தோளோடு தோளாக நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com