கண்மாயில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி

மானாமதுரை அருகே பள்ளிக்கூட வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
கண்மாயில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
Published on

சிவகங்கை, ஜூலை.12-

மானாமதுரை அருகே பள்ளிக்கூட வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

கண்மாயில் கவிழ்ந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரிய கோட்டையில் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் படிக்கும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர், பள்ளி வேன் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.

நேற்று அந்த பள்ளியின் வேன் வேம்பத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. மானாமதுரையை அடுத்த சருகநேந்தல் அருகே சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு கண்மாய் கரையில் அந்த வேன் வந்தது. அப்போது எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது.

அதற்கு வழிவிட டிரைவர் சாலையோரமாக வேனை திருப்பியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

7-ம் வகுப்பு மாணவர் சாவு

இதனால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் காயம் அடைந்து அலறினர். இந்த விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் ஓடிவந்து, வேனில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேன் கவிழ்ந்ததில் வேம்பத்தூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ஹரி வேலன்(வயது 13) பலத்த காயம் அடைந்தான். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.

மேலும் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் ஹரிவேலனின் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா ஆகியோர், ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த மாணவ- மாணவிகளை சந்தித்து அவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர். காயம் அடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்த விபத்து தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செழியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com