கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கீழடி அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Published on

மதுரை,

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுபணித்துறை, சாலைப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழக பொதுப்பணி, சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இரண்டு நாள் பயணமாக மதுரை வந்தார்.

தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் கீழடி சென்ற அவர், அங்கு நடந்து வரும் அகழ்வராய்ச்சி பணிகளை பார்வையிட்டார். மேலும் ரூ.12 கோடியில் கீழடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டிடத்தையும், அவர் பார்வையிட்டார். பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-

"கீழடியில் கிடைத்துள்ள பண்டைய கால பொருட்கள் மூலம், கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

இந்த அருங்காட்சியக கட்டிடம் செட்டிநாடு கட்டிடகலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. காட்சி கூடத்தில் ஒளி, ஒலி காட்சி அரங்கு, அதற்கான அலங்கார வடிவமைப்பு, மற்றும் சிற்பக்கலைக்கூடம் அமைக்கும் பணி முடிவடைய இன்னும் 2 மாதம் ஆகும். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்"

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com