கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரேநாளில் 13 அடி உயர்வு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீடிப்பு

கொட்டித்தீர்த்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 13 அடி உயர்ந்து, 114.30 அடியை எட்டியது.
Published on

கொட்டித்தீர்த்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 13 அடி உயர்ந்து, 114.30 அடியை எட்டியது.

சோத்துப்பாறை அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். இந்த அணையின் மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கான நீர்வரத்து குறைந்ததுடன், நீர்மட்டமும் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேபோல் நீர்மட்டமும் உயர தொடங்கியது.

கொட்டித்தீர்த்த கனமழை

இதற்கிடையே சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. விடிய, விடிய பெய்த மழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்தது.

அதாவது நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.02 அடியாக இருந்தது. கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 92.78 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பக்கரை அருவி

இதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com