மதுரை ஐகோர்ட்டில் ‘தினம் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும்’; வக்கீல்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

மதுரை ஐகோர்ட்டில் தினம் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும் என வக்கீல்களுக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
மதுரை ஐகோர்ட்டில் ‘தினம் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும்’; வக்கீல்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
Published on

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சார்பில் வக்கீல்களுக்கு அறிவுரை கூறி கோர்ட்டு முன்பு அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது:-

தமிழ் இலக்கிய ஆர்வலர் பழமலை என்பவரின் மகனும், செசன்சு நீதிபதியுமான செம்மல், திருக்குறள் முனுசாமி என்ற புத்தகத்தை சமீபத்தில் எனக்கு பரிசாக வழங்கினார். அதை படித்தபோது, திருக்குறளை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கூறியது நினைவிற்கு வந்தது.

தமிழர்களாகிய நாம் குறைந்தபட்சம் 51 குறள்களையாவது, மனப்பாடமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி முதல் கட்டமாக, சொல்லுவது சொல்லை பிரிதோற்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து என்ற குறளை நான் மனப்பாடம் செய்துள்ளேன்.

இதைப்போல வக்கீல்களும் இனி தினந்தோறும் இந்த கோர்ட்டில் ஒரு குறளை மனப்பாடம் செய்து அதற்கான பொருளுடன் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பகல் 1.30 மணி அல்லது மாலை 4.45 மணியளவில் கூற வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com