தேர்தலின்போது சொன்ன ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தி.மு.க நிறைவேற்றி வருகிறது - உதயநிதி ஸ்டாலின்

தேர்தலின்போது சொன்ன ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தி.மு.க நிறைவேற்றி வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தேர்தலின்போது சொன்ன ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தி.மு.க நிறைவேற்றி வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
Published on

பொள்ளாச்சி,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவே இல்லை. அவர்களுக்கு அந்த தெம்பு, தைரியம் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்த 9 மாதங்களிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்தி காட்டியுள்ளோம். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதோடு மட்டுமில்லாமல் இதில் பெண்களுக்கு என்று 50 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய கட்சி தி.மு.க. தான்.

நான் எப்போது இங்கு வந்தாலும் கோவை மக்கள் சிறப்பான வரவேற்பு, அன்பை கொடுப்பீர்கள். இப்போதும் அதுபோன்று கொடுத்துள்ளனர். ஆனால் உங்களை நம்ப முடியாது. ஏனென்றால் சட்டமன்ற தேர்தலிலும் இதுபோன்று தான் நான் வந்த இடத்தில் எல்லாம் வரவேற்பு கொடுத்தீர்கள். ஆனால் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க.வுக்கு கொடுக்கவில்லை. இந்த முறை அது மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் நான் தி.மு.கவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், வாக்காளிக்காதவர்களும் தங்களுக்கு வாக்களித்திருக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என கூறினார். அதன்படி தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

தி.மு.க ஆட்சியில் அமர்ந்தபோது, முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க., அரசு கஜானாவில் 6 லட்சம் கோடி கடனை மட்டுமே வைத்திருந்தது. கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். குறிப்பாக உள்ளாட்சித்துறையில் பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் 110 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தோம். அதன்படி தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறைக்கு தள்ளுவோம்.

இது ஒன்றும் அடிமை அ.தி.மு.க. ஆட்சி கிடையாது.தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க ஆட்சி. இங்கு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க தேர்தலின்போது தெரிவித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நிவாரண உதவி 4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் லிட்டருக்கு 3 குறைப்பு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 3 குறைப்பு, மகளிர் சுய உதவிகுழு கடன் தள்ளுபடி, என நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்து அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். விரைவில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட உதவித்தொகையான ரூ.1000 விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com