

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிபாளையத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் மற்றும் கோதண்ட ராமர் ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 70 நாட்களில், ஆக்கிரமிப்பில் இருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பு, கோவில் சொத்துகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள சிலைகள் அடையாளம் காண்ப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கோவில் சிலைகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.