

சென்னை,
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 2-வது தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 68 ஆயிரத்து 457.
முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 450 ஆகும். கூடுதலான வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 69 சதவீதம் பேர். 2-வது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம்.
தடுப்பூசி முகாம்களுக்கு இன்று (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும். தடுப்பூசிகள் தற்போது கையிருப்பாக 43 லட்சம் அளவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.