

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்தது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பருத்திக்குடியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேற்கூரை, 'கான்கிரீட்' பெயர்ந்தது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர் காயமடைந்தார். இதனால், திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அதிகாரி, மீது மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதற்கு தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது மாடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரச்சினையை சுமூகமாக முடித்து தருவதாக, கூடுதல் கலெக்டர் உறுதியளித்தார்.
2-வது நாளாக போராட்டம்
இது தொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் கூறிய நிலையில், எவ்வித பேச்சுவார்த்தைக்கு ஊழியர்கள் அழைக்கப்படாத நிலையில், 2-வது நாளாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன், பொருளாளர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.