பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்

6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி பேசினார்.
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்
Published on

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- தமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளிக் கல்வித்துறையின் வழியாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க பிறதுறைகளையும் இணைத்து செயலாற்ற வேண்டும். அந்த வகையில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்டத் துறைகளை கொண்ட குழுவின் வழியாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள் அமலாக்கக்குழு

அதேபோன்று பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்கள் குறித்த விவரங்களை கொண்டு தொடர்புடைய பெற்றோர்களிடம் பேசி, அந்த மாணவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். மாவட்ட துணை கலெக்டர்களின் கீழ் குழந்தை தொழிலாளர்கள் அமலாக்கக்குழு உருவாக்கப்பட்டு போலீஸ்துறை மற்றும் வருவாய்த்துறைகளின் ஒத்துழைப்போடு குழந்தை தொழிலாளர்கள் அற்ற நிலையினை உருவாக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவைப்போல் வட்டார அளவிலான குழு, பள்ளி அளவிலான குழுவும் அமைத்திடல் வேண்டும். பள்ளி அளவிலான குழுவின் மூலம் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து பள்ளிக்கு வர வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வட்டார அளவிலான குழுவானது பள்ளி அளவிலான குழுவினரின் செயல் திறனை மதிப்பிடுவதற்கும், இடைநிற்றல் குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com