பட்டாக்கத்தியை கையில் வைத்து நாக்கை அறுப்பேன் என டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர் கைது

பட்டாக்கத்தியை கையில் வைத்து “நாக்கை அறுப்பேன்” என டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர், அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியதால் கைது செய்யப்பட்டார்.
பட்டாக்கத்தியை கையில் வைத்து நாக்கை அறுப்பேன் என டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளில் சமீப காலமாக பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் போஸ் கொடுப்பதும், பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை பெரிய ரவுடிகளாக சித்தரித்து கொள்கின்றனர்.

இந்தநிலையில் வாலிபர் ஒருவர், கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய ரவுடியை போல் சித்தரித்து, நாக்கை அறுப்பேன் என்று சினிமா பாடலுக்கு ஏற்ப டிக்-டாக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த வீடியோவை பார்த்த பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சபரிநாதன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில் இருந்தவர் யார்? என விசாரணை செய்தனர். டிக்-டாக் கில் வீடியோவை பதிவேற்றம் செய்த ஐ.டி.யை வைத்து விசாரணை செய்ததில் வீடியோவில் இருப்பவர் பெரும்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த அகஸ்டின் (வயது 24) என தெரியவந்தது.

இதையடுத்து அகஸ்டினை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் பட்டாக்கத்தியை காட்டி நாக்கை துண்டாக அறுப்பேன் என்று பாடலுக்கு ஏற்றார்போல் நடித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியது அவர்தான் என்பது உறுதியானது.

இதையடுத்து அகஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வீடியோவை எடுக்க உதவிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com