தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது
Published on

துப்பாக்கி சூடு

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தால் நடந்த துப்பாக்கி சூடு, தடியடி காரணமாக 13 பேர் இறந்தனர்.

அஞ்சலி

இந்த சம்பவம் நடந்து 3-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 6.30 மணி முதல் 10 மணிக்குள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறவழி போராட்டங்கள் நடந்த குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர், பாத்திமாநகர், காந்திநகர், லயன்ஸ்டவுன், பூபாலராயர்புரம், மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு அந்தந்த பகுதி மக்கள் சார்பிலும், கூட்டமைப்பு சார்பிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து இறந்தவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நடவடிக்கை

மேலும் இந்த நினைவு நாளில் அரசுக்கு சில கோரிக்கைகளை வைக்கிறோம். அதன்படி ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழி கண்டறிந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவெடுத்து உயிர்ச்சூழலை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com