திருப்பத்தூர்: புதிய பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிப்பு


திருப்பத்தூர்: புதிய பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிப்பு
x

அரளிக்கோட்டை, தானிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் புதிதாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்ட நிலையில், புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களுக்கு கீழே, இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

அதிலும் இந்தி எழுத்துகள் தமிழை விட பெரிய அளவில் எழுதப்பட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். பெயர்ப் பலகைகள் மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில் புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் இன்று கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏரியூர், அரளிக்கோட்டை, தானிப்பட்டி, காட்டாம்பூர், கருவேல்குறிச்சி மற்றும் பைக்குடிபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story