

சென்னை,
2018-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் 10-வது இடத்தையும், பல்கலைக்கழகங்களின் பிரிவில் 4-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8-வது இடத்தையும் பெற்றதற்காக, டெல்லியில் கடந்த 3-ந்தேதி நடைபெற்ற விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விருதுகள் வழங்கினார்.
அந்த விருதுகளை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தேனி மாவட்டம், கோட்டூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநில கல்லூரியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுழைவுவளைவு, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடங்கள், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடங்கள், நெல்லை மாவட்டம், அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவாளர் குடியிருப்பு, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஞானவாணி வானொலி நிலையக் கட்டிடம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
ரூ.1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு எண்ணியல் நூலக இணையதளத்தையும் (டிஜிட்டல்) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம் மூலம், உயர்கல்வித்துறையின் 13 பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகள் இணைக்கப்படுவதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இந்த எண்ணியல் நூலகத்தை பயன்படுத்தி மின்னணு புத்தகங்களை படித்திடவும், உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளவும் வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.