விபத்தில் பலியானவர் குடும்பத்துக்குநஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்குநஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

பெருந்துறை

பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது 35) என்பவர் கடந்த 25-02-2013 அன்று பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார். இதைத்தொடர்ந்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு பெருந்துறை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 400-யை கோவை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த 26-2-2015 அன்று தீர்ப்பு கூறியது.

இதையடுத்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூடுதல் தொகை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மனுதாரருக்கு ரூ.14 லட்சத்து 73 ஆயிரத்து 600-யை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று, கடந்த 10-12-2021 அன்று கூறியது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் கடந்த மாதம் வரை வழங்கவில்லை. இதையடுத்து, சிதம்பரத்தின் குடும்பத்தினர், இதுகுறித்து பெருந்துறை சப்-கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்தனர்.

அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து 31-3-2023 அன்று வரைக்கும், வட்டியுடன் சேர்த்து, ரூ.23 லட்சத்து 79 ஆயிரத்து 844-யை மனுதாரருக்கு உடனடியாக. அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈட்டு தொகையை வழங்கவில்லை. இதுகுறித்து, மனுதாரர் சார்பில், பெருந்துறை சப்-கோர்ட்டுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய, பெருந்துறை சப்-கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், பெருந்துறை பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்சை பெருந்துறை சப்-கோர்ட்டு அமீனா நேற்று ஜப்தி செய்து, கோர்ட்டு முன்பு நிறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com