தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம்

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.
Published on

வால்பாறை

தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

வருகை அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு கோவை மாவட்டமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து இயற்கை எழில் கொஞ்சும் அழகுகளை ரசித்து செல்கிறார்கள். தற்போது மிலாது நபி உள்ளிட்ட தொடர் விடுமுற மற்றும் காலாண்டு விடுமுறை காரணமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதை காணமுடிந்தது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் வால்பாறை பகுதிக்கு கூடுதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதிக்கு திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் காலாண்டு விடுமுறை சுற்றுலா வந்திருந்தனர்.

செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

இவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்பி எடுத்து சென்றனர்.

இதேபோல் கோவை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கோவை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் கூழாங்கல் ஆற்றில் காலி மதுபாட்டில்கள், திண்பண்டங்களின் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்களை எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.

நேற்று மதியம் 2 மணி முதல் வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் கூடுதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் கூழாங்கல் ஆற்று பகுதியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் வரக்கூடிய இளம் சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஒட்டி சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com