உத்தரமேரூர்: 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்கள் கண்டுபிடிப்பு..!

உத்தரமேரூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதனின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Published on

உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ளது சாலவாக்கம் கிராமம். இந்த கிராம காடுகளுக்கு அருகில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய இடங்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் குழுவினர் கண்டறிந்துள்ளார்கள்.

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-

அன்பில்பிரியன் கொடுத்த தகவலின் பேரில் விஜயகுமார் மற்றும் தாஜூதீன்அகமது ஆகியோருடன் இணைந்து எடமிச்சி காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள அமரக்கல்குன்று மற்றும் 2 பாறைகளை களஆய்வு செய்தபோது இந்த புதிய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை கண்டறிந்தோம்.

புதிய கற்காலம் என்பது வேட்டை சமூகமாக இருந்த ஆதி மனிதர்கள் தட்பவெப்ப சூழலாலும் உணவை தேடியும் நாடோடிகளாக ஓடி திரிவது முடிந்து ஓர் இனக்குழுவாக ஓரிடத்தில் தங்கி வாழ்வை தொடங்கிய காலம் என கொள்ளலாம் கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலமாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது. அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்தார்கள. ஆகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளை கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை பயன்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இந்த கற்குழிகளாகும்.

அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது. அதன் நடுவில் நீர் தேங்கும் பெரிய சுனை ஒன்று உள்ளது. அதன் அருகில் 4 இடங்களில் வெவ்வேறு அளவுகளில் வழவழப்பான குழிகள் இருப்பதை கண்டறிந்தோம். அதில் ஒரு குழி 21 சென்டிமீட்டர் நீளமும் 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது

மேலும் வெவ்வேறு அளவுகளில் 2 குழிகள் காணப்பட்டன. அந்த குழிகளை ஆய்வு செய்தபோது அது கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களை கூர்மை செய்ய அல்லது பட்டை தீட்டிய அடையாளம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இடத்துக்கு அருகில் உள்ள 2 பெரிய பாறைகளிலும் இதே போன்ற நீர் தேங்கும் சுனைகளும் அதற்கு அருகிலேயே பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகளை கண்டறிந்தோம்

இந்த குன்று மற்றும் பாறைகளில் நீர் தேங்கும் சுனைகளை சுற்றி பல இடங்களில் உள்ள இந்த வழவழப்பான இந்த குழிகள் கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டி கூர்மைப்படுத்தி அவற்றை கொண்டு விலங்குகளை வேட்டையாடியும் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சிகளை உணவுக்காக பல துண்டுகளாக பயன்படுத்தவும் இந்த கருவிகளை பயன்படுத்தினார்கள்.

தொடர்ந்து 5 ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஊரில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஊரின் சிறப்பாகும். இதுபோன்ற பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நமது கடமையாகும். எனவே தமிழக தொல்லியல் துறை இந்த இடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com