வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
Published on

தஞ்சை தெற்குஅலங்கம் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை மாற்ற வலியுறுத்தி மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் டாஸ்மாக் கடை முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதை அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

இதையடுத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் வியாபாரிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தெற்குஅலங்கம் மாட்டுமேஸ்திரி சந்து பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. குடியிருப்புகளும் உள்ளன.தெற்குவீதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாட்டுமேஸ்திரி சந்து வழியாக தான் சென்று வருகின்றனர். இது தவிர வங்கிகள், கோவில்களுக்கு செல்லும் மக்களும் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பிரச்சினை

சந்தின் நுழைவு பகுதியில் முதல் கடையே டாஸ்மாக் கடை தான். இந்த ஒரு கடையால் அனைத்து தரப்பினரும் பல்வேறு அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர். மது குடிப்பவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வம்பு செய்வதுடன், தகாத வார்த்தைகளாலும் பேசுகின்றனர்.மாணவ, மாணவிகள், பெண்கள் தினசரி ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com