

சென்னை,
கொல்கத்தா ஐகோர்ட்டில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 11 மாதங்களில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் கொலிஜியம் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது.
மேலும் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.