ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் -பிரேமலதா

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருந்த ஊதிய உயர்வை தி.மு.க. அரசு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றிவிட்டது.
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் -பிரேமலதா
Published on

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருந்த ஊதிய உயர்வை தி.மு.க. அரசு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றிவிட்டது. தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து 4 மாதங்களாகியும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட சரத்துக்கள் பல நிறைவேற்றப்படுவதில்லை. பல கிளைகளில் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை அதிகமாகி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரிகளின் மெத்தன போக்காலும், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அராஜகத்தாலும், பல இலவச திட்டங்களாலும் போக்குவரத்து துறை ரூ.50 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

15-வது ஊதிய உயர்வு தொடர்பாக உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com