மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட இருக்கிறது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு
Published on

சென்னை,

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 26-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார்.

அப்போது அவர், அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தவிர கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து, பிரத மருடனான காணொலி காட்சி கூட்டத்தின் போதும், பிரதமருக்கு எழுதிய கடிதத் திலும் தமிழ்நாடு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் அரிசி, கோதுமை ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதும் பிரதமரிடம் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த 5 கிலோ அரிசியை வழங்குவதற்கு, கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய ரூ.84 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் தற்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழகத்தின் அனைவருக்குமான பொது வினியோக திட்டம் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல் மாதத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக அறிவித்துள்ள ஏப்ரல் மாதத்துக்கான 5 கிலோ அரிசியானது, மே, ஜூன் மாதங்களில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com