

சென்னை,
புவி வெப்பமடையும் பேராபத்தை தடுப்பதற்காக காலநிலை அவசரநிலையை அறிவிக்கக்கோரி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் கடந்த 23-ந்தேதி முதல் சென்னையில் காலநிலை அவசர நிலை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பிரசாரத்தின் நிறைவு நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.
இதில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். காலநிலை அவசர நிலையை அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் வைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
புவியின் வெப்பத்தை குறைக்க கார்பன்-டை- ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுங்குடில் வாயுக்களின் அளவை குறைக்க வேண்டும். நிலத்தின் கீழ் உள்ள பெட்ரோல்-டீசல், மண்எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருட்கள் பயன்பாட்டை குறைப்பதால் இதனை கட்டுப்படுத்த முடியும். போக்குவரத்து கொள்கை கொண்டு வந்து மின் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதற்காக மத்திய-மாநில அரசுகள் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டும்.
ஐ.நா. மன்ற நிபுணர் குழு ஆய்வுகள் நடத்தி கடலோர நகரங்கள் இன்னும் 40 ஆண்டுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக சென்னை, மும்பை, கொச்சி போன்ற நகரங்களுக்கு பெரிய ஆபத்து நேரிடும். அதுமட்டுமன்றி விவசாயம் பெரியளவில் பாதிக்கும். புதிய நோய்கள் வரும். காலநிலை அகதிகள் உருவாகுவார்கள். பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் மனிதர்கள் அழிவும் நடைபெறும். எனவே தான் பசுமை தாயகம் தொடர்ந்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் 23 இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி மக்களை சந்தித்து சொல்லியிருக்கிறோம். எனவே மக்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். எங்கள் நோக்கம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மக்கள் ஒன்று சேர்வதின் மூலம் காலநிலை அவசரநிலை பிரகடனம் சாத்தியமாக வேண்டும். தேர்தல் பிரசாரம் போலவே இந்த விழிப்புணர்வு பிரசாரத்திலும் பா.ம.க. தீவிரமாக ஈடுபடும். சுவீடனை சேர்ந்த 16 வயது சிறுமி, எங்கள் தலைமுறையை காப்பாற்றுங்கள். அதை கெடுப்பதற்கு நீங்கள் யார்? என்று உலக தலைவர்களை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறாள். எனவே காலநிலை அவசரநிலை பிரகடனம் முக்கியமான ஒன்று. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுப்போம்.
மேலும் காவிரி-டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் அழுத்தம் தருவோம். கீழடியில் தமிழர்கள் நாகரிகம், பண்பாடு வெளிப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிப்பிடும் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்து சமவெளி நாகரிகத்துக்கு நிகரானது நமது தமிழக கலாசாரம். எனவே கீழடி அகழாய்வுக்கு மத்திய-மாநில அரசு கூடுதல் நிதி கொடுத்து, இன்னும் அதிக ஆராய்ச்சி மேற்கொள்ள உதவவேண்டும். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து பாதுகாக்க ஒரு கண்காட்சி ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அன்புமணி ராம தாசின் மகள் சங்கமித்ரா, பா.ம.க. துணை பொதுச் செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, வி.ராதாகிருஷ்ணன், சகா தேவன், அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.