மாமல்லபுரத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி யோகாசனம் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்ற யோகாசனத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, தமிழக பா.ஜ.கா. தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
மாமல்லபுரத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி யோகாசனம் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் வளாகத்தில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய சமூகநீதித்துறை அமைச்சகம் சார்பில் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகாசன நிகழ்ச்சியை மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி நாராயணசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்தனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதாசுப்பிரமணியம், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் உள்ள மூத்த யோகாசன பயிற்சியாளர்கள் 75 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், சித்தா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி, சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் இயக்குனர் கார்த்திக் செஞ்சுடர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி ஏ.நாராயணசாமி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் மகத்தான முயற்சியால் இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரிய யோகா ஐக்கியநாடுகள் சபையின் அங்கீகாரத்தை பெற்றது. நாட்டின் முதன்மை சேவகராக கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரமோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். அவருடைய உழைப்புக்கு உறுதுணையாக உடல் ஆரோக்கியம் இருப்பதற்கான ரகசியம், யோகா பயிற்சி தான். நவீன கால வாழ்க்கை முறையால் ஏற்படும் மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வாக யோகா பயிற்சி அமைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 25 முக்கிய புராதன, கலாசார இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. யோகா செய்வதால் உடலும், மனதும் வலிமை பெறும்.

மால்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியை காண பிரதமர் மோடி வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. என்றுமே தலையிடாது. அதுபற்றி கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். இதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். யோகா பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com