

சென்னை,
தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளது. தேர்தலின்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதுபோல, பதிவு செய்யப்பட்ட எங்கள் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல், பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகாரமில்லாத கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது. அந்தக் கட்சிகள் தொகுதிவாரியாக தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, பிரசாரம் செய்ய அனுமதி பெறலாம் என்று கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில், மனுதாரர் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று உத்தரவிட்டனர்.