

தர்மபுரி மாவட்டத்தில் 1,934 இடங்களில் 33,815 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நல்லம்பள்ளியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. தற்போது தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று 1,934 இடங்களில் 36-வநு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
நல்லம்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமுக்கு தேவையான அனைத்து மருந்துகள் உள்ளதா? தடுப்பூசி செலுத்த வர முடியாதவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து செவிலியர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் பெருமாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் உடன் இருந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் 1,934 இடங்களில் நடந்த முகாம்களில் 33,815 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.