தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: என்ன காரணம்.? - விளக்கம் அளித்த தெற்கு ரெயில்வே

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு, நேற்று வழக்கம் போல் கோ.பவழங்குடி பகுதியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் தனியார் வேனில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டனர். வேனை விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். காலை 8 மணி அளவில் கோ.பூவனூர் ரெயில்வே கேட் அருகே வேன் சென்றது.
அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பிரேக் பிடிக்காமல் ரெயில்வே கேட் அருகே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. தொடர்ந்து மோதிய வேகத்தில் அந்த வேன் தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் வேனுக்குள் சிக்கிய பள்ளி மாணவ- மாணவிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறி துடித்தனர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ஓடி வந்து வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தும், ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களை மீட்டனர்.
பின்னர் தண்டவாளத்தில் கவிழ்ந்த வேனை, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தூக்கி நிறுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காயமடைந்த மாணவ - மாணவிகள் 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் பூவனூர் ரெயில்வே கேட் பகுதிக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்த போது அவ்வழியாக ரெயில்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் பூவனூரில் நேற்று (25-ந்தேதி) காலை 7.57 மணிக்கு தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது வேன் டிரைவர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மேலும், கவனகுறைவாக வாகனத்தை இயக்கிய வேன் டிரைவர் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். விபத்து நடந்த தண்டவாளத்தின் இருபுறமும் வேகத்தடைகள் மற்றும் முறையான எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் ரெயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மேலும், ரெயில்வே உபகரணங்கள் எதுவும் சேதமடையவில்லை. விபத்து நடந்த இடத்தை திருச்சி கோட்ட மேலாளர் ஸ்ரீ பாலக் ராம் நேகி, ரெயில்வே அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். தண்டவாளத்தை கடக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, டிரைவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






