ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் வேதா இல்லம் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக அங்குள்ள இடத்தை கையகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது 10 கிரவுண்டு இடத்துடன் கூடிய போயஸ் கார்டன் வேதா இல்லம் சென்னை கலெக்டர் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை கையகப்படுத்தும் போது சட்டப்படி, வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை கணக்கிட்டு அந்த தொகை வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

போயஸ் கார்டன் சொத்தை கையகப்படுத்தி மிகப்பெரிய தொகையை இழப்பீடாக வழங்குவதற்கு பதிலாக அந்த தொகையை அத்தியாவசிய பணிகளான உட்கட்டமைப்பு பணி, குடிநீர் வசதி, நீர்நிலைகளை சுத்தப்படுத்துவது போன்ற வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தலாம். நாட்டில் ஏராளமான அத்தியாவசிய பணிகள் இன்னும் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கும்போது, நினைவு இல்லம் என்ற பெயரில் பொதுமக்கள் பணம் வீணாக்கப்படக்கூடாது.

உண்மையாகவே மரியாதை

மறைந்த தலைவர்களுக்கு உண்மையாகவே மரியாதை செலுத்துவது என்பது அவர்களது கொள்கைகளை பின்பற்றி மக்கள் நலனுக்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுவதே ஆகும். போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதன் மூலம் இதுபோன்ற செயல்திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஆட்சியாளர்கள், முதல்-அமைச்சர்களாக இருந்த தங்களது தலைவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற விரும்புவதன் மூலம் தேவையில்லாமல் பொதுமக்களின் பணம் நினைவு இல்லங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மறுபரிசீலனை

எனவே, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் அரசின் வருவாயில் இருந்து செலவிடப்படும் மிகப்பெரிய தொகையை தடுக்க முடியும். 10 கிரவுண்டு நிலப்பரப்பை கொண்டுள்ள போயஸ் கார்டன் 15 ஆண்டுகளுக்கு மேலாக முதல்-அமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தை, முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துடன் கூடிய அலுவலகமாக மாற்ற அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு பதிலாக முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துடன் இணைந்த அலுவலகமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஒரு பகுதி நினைவிடம் போயஸ் கார்டனின் ஒரு பகுதியை நினைவிடமாகவும், மற்றொரு பகுதியை முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துடன் இணைந்த அலுவலகமாகவும் மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்.

வேதா இல்லத்தை முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துடன் கூடிய அலுவலகமாக மாற்றுவதற்கு போயஸ் கார்டன் இடத்தை கையகப்படுத்தும்பட்சத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும். எனவே நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com