

சென்னை,
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட டாக்டர் சைமன் ஹெர்குலஸ் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எடுத்துச்சென்றபோது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடல், வேலங்காடு மயானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கும் 60-க்கு மேற்பட்ட நபர்கள் கூடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கியும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின் டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி தினத்தந்திக்கு அளித்த பேட்டியில், என்னுடைய கணவர் உடல் அனாதைப்போல வேலங்காடு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. கணவர் உடலை அவருடைய ஆசைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர்மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக மருத்துவக்குழு அமைக்கப்பட்டு அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனை முடிவில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி, தனது கணவரின் உடலை மீண்டும் எடுத்து கீழ்ப்பாக்கம் சிமெட்ரிக் போர்டு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகொள் விடுத்திருந்தார். இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது. அந்த அறிக்கையின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட பின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளது. இதனால் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட டாக்டர் சைமன் உடலை மீண்டும் கீழ்ப்பாக்கம் கொண்டு வருவது சாத்தியமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.