

சென்னை,
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அனுமதி மறுப்பு
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.,வின் தீவிர ஆதரவாளர்களாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களாக இருந்த இருவரும் சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை கோட்டை வளாகத்தில் இருவரும் நேற்று முன்தினம் பேட்டி கொடுக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. அப்போது போலீசாரோடு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டைக்கு எதிரே உள்ள பூங்கா பகுதியில் இருவரும் பேட்டி கொடுத்துவிட்டு சென்றனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையொட்டி இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடந்தபோது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பாக வீடியோ படக்காட்சியை வெற்றிவேல் வெளியிட்டார். அதுதொடர்பாக வெற்றிவேல் மீது அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க வெற்றிவேல் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். தற்போது வெற்றிவேல் புதிய வழக்கில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.