கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து மேஜை, ஏசி, பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்...!

இதில் போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளியை தீக்கிரையாக்கினர்.
கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து மேஜை, ஏசி, பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்...!
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில், உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு நடந்துவந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளியை தீக்கிரையாக்கினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணை தொடர்ந்து சரியான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக பள்ளி நிர்வாகத்தினரிடமும், சிசிடிவி காட்சிப் பதிவுகளை சேகரித்தும், கைரேகைகளை தடயவியல் துறைக்கு அனுப்பி வைப்பது என்று விசாரணை கடந்த 3 நாட்களாக முறையாக நடந்துவருகிறது.

இதுமட்டுமின்றி, உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. பள்ளியின் சிசிடிவி காட்சிகள், மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை நாளை தாக்கல் செய்யவுள்ளோம். விசாரணையைப் பொருத்தவரை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த போராட்டத்தில், பல்வேறு மாணவர் அமைப்புகள், மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, மாணவியின் பெற்றோர், மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருந்தோம். அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை, விசாரணை உரிய முறையில் நடத்த வேண்டும். விசாரணையில், சந்தேகம் ஏற்பட்டால், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான் விசாரணை நடத்தி வருகின்றோம்.

இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வந்தது. அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஐஜி உள்ளிட்டோர் வந்துள்ளனர். கலவரம் பரவாத வகையில் காவல்துறையினர் சுமுகமாகத்தான் கையாண்டனர். கூடுதல் காவல்துறையினர் வந்தவுடன் போராட்டக்காரர்களை கலைத்துள்ளோம்.

கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் பள்ளிக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னசேலம் மற்றும் நயினார் பாளையம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் திடீரென கூடியதால்தான் போராட்டம் கைமீறி சென்றதாக மாவட்ட எஸ்.பி. கூறினார்.

இந்தநிலையில் மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். பஸ்களை டிராக்டர் வைத்து இடித்து நாசப்படுத்தினர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் போராட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர்.

இது ஒரு புறம் இருக்க, இருப்பதை கிடைத்து சுருட்டி கொண்டு ஓடி விடலாம் என பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம் 2, 3 என அள்ளிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரே சந்தை போல் காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com