உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்.
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி மற்றும் ஆணைய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட தலைமை அலுவலகங்களில் புகார் பிரிவு அமைக்க வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்யப்படாத இடங்கள், ஒரு வேட்பு மனு மட்டும் பெறப்பட்ட விவரங்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வரப்பெறும் புகார்கள் குறித்த நடவடிக்கை விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறிந்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com