

சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தினத்தை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம்.
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் வளர்ந்தால் தான் தேசம் வளரும். 'விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்'. ஆகவே, நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்ற வேண்டும். அவர்களுக்கு உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்த போது விவசாயிகள் மட்டும் தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை இந்நாளில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.