மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மெரினா கடற்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, ஒரே ஆண்டில் சாராய பாட்டில்களை பதுக்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று சொல்லும் அளவுக்கு சாராய பாட்டில்கள் மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், 'திராவிட மாடல்' ஆட்சியை படம் பிடித்து காட்டி இருக்கிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருப்பது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தமிழ்நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சாராய பாட்டில்கள் 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு சொந்தமானவையா? அல்லது கள்ளச் சாராயம் காய்ச்சி பாட்டில்களில் நிரப்பி தனியாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும், இதற்கு பின்னணியில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறதா? என்பதையும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் மடைமாற்றி விடப்படுகிறதா? என்பதையும் போலீசார் தீர விசாரித்து, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பது மிகமிக அவசியம் ஆகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு நடைபெறுகின்றன? என்பதை கண்டறிந்து, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com