

சென்னை,
கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்த பெண், சேலத்தில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சேலம் ஹோமியோபதி கல்லூரியின் டீனை ஹாதியாவின் பாதுகாவலராக நியமிக்கிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும், எங்களை டீன் அணுகலாம். ஹாதியாவுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி தருமாறு கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிடுகிறோம் என கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சேலம் கல்லூரிக்கு ஹாதியா அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக போலீஸ் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் சேலம் ஹோமியோபதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி கண்ணன் பேசுகையில் ஹாதியாவை யாரும் சந்திப்பதற்கு அனுமதிக்க மாட்டேன், அவருடைய பெற்றோர் மட்டுமே அவரை சந்திக்க முடியும் என கூறிஉள்ளார்.
ஹாதியாவின் கணவர் அவரை சந்திக்க அனுமதிக்கமாட்டேன், அவருடைய பெற்றோர்தான் கல்லூரியில் சேர்த்தனர். அவர்கள் மட்டுமே ஹாதியாவை சந்திக்க முடியும். என கண்ணன் கூறியதாக தனியார் ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. கல்லூரி விடுதியில் பிற மாணவிகளை போன்றே ஹாதியாவும் நடத்தப்படுவார். அவர் தனியாக எங்கும் செல்ல முடியாது, முன்கூட்டி அனுமதி பெறாமல் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய ஆவணங்கள் அடிப்படையில் இப்போது ஹாதியா அகிலா அசோகன் தான். பெயரில் மாற்றம் வேண்டும் என்றால் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அவர் கல்லூரியில் மறுபடியும் சேர விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிஉள்ளார்.