கல் மண்டபம் புதுப்பொலிவு பெறுமா?

ராஜபாளையத்தில் உள்ள கல் மண்டபம் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல் மண்டபம் புதுப்பொலிவு பெறுமா?
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையத்தில் உள்ள கல் மண்டபம் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல் மண்டபம்

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள கல் மண்டபம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது:-

ராஜபாளையம் அருகே பிரதான சாலையின் ஓரங்களில் ஒரு சில கல் மண்டபங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அய்யனார் கோவில் முடங்கியார் பாலம் அருகே 6 தூண்களுடன் கூடிய பழமையான கல் மண்டபம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு தூண்களும் எண்பட்டை கோணங்களுடன் மேல் மற்றும் கீழ்பகுதியில் சதுரப்பட்டைகளில் நான்கு புறங்களிலும் சிறு, சிறு உருவங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

கட்டிடக்கலை நிபுணர்

கல்தூண் மண்டபத்தில் மேற்கூரை கற்களை வரிசையாக கொண்டு, சுண்ணாம்பு கலவையால் அமைத்துள்ளனர். கல் மண்டபத்தின் மேல் விதானத்தில் அலங்காரப்பூக்கள், மீன் சின்னங்கள், சிங்க முகம் ஆகியவை சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கல் மண்டபங்களை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணர்களை கொண்டு இந்த இடத்தை தேர்வு செய்வது முதல் பல்வேறு கட்டங்களாக மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. மண்டபங்கள் கட்டுவதற்கு தேவையான கற்கள் மற்றும் பணியாட்களை கொண்டு எத்தனை காலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும் போது அந்த காலகட்டத்தில் உள்ள தொழில்நுட்பத்தை தற்போதுள்ள எந்திர காலகட்டத்தில் செய்ய முடிவதில்லை.

நில வரைபடம்

ஒவ்வொரு தூண்களும் மிக நேர்த்தியாக ஒரே அளவிலாக அமைக்கப்பட்டு, மேல் விதானங்களிலும் சிற்பங்களை செதுக்கி கற்களை கொண்டு தற்போதும் சரியாத நிலையில் இருக்குமாறு திடமாக அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுமானங்களை போலவே கல் மண்டபங்களை அமைக்கும் பொழுதும் நில வரைபடம் அமைத்து நீள, அகல, உயரங்களை கணக்கிற்கொண்டு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. பழங்காலத்தில் அய்யனார் கோவிலுக்கு செல்லும் மக்கள் திருவிழாவின் போதும், மற்ற விசேஷ காலங்களிலும் மக்கள் இங்கு வந்து தங்கி, அருகிலுள்ள முடங்கியாற்றில் நீராடி விட்டு அய்யனாரை வணங்கி சென்றுள்ளனர். நமது ஊரின் வரலாற்றுப் பெருமையை உணர்த்திய இக்கல் மண்டபம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மண்டபம் புதுப்பொலிவு பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர்கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com