பலமுறை தஞ்சாவூர் செல்லும் முதல்-அமைச்சர் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்து வாங்கிய கடனை கேட்டு விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுத்தும் பயனளிக்காத நிலையில், இன்று முதல்-அமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் பெயரில் மோசடியாக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதோடு, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்காமல் ஆலையை மூடிய தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு வருகை தந்த போதும், இதே கோரிக்கையை வலியுறுத்திய கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளைக் கைதுசெய்த காவல்துறை, இம்முறையும் முதல்-அமைச்சரைச் சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளான மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com