என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வந்த தொடர் மவுசு


என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வந்த தொடர் மவுசு
x

என்ஜினீயரிங் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உதயமாகிவிட்டது.


40 ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. காரணம் அப்போது வெகு சில என்ஜினீயரிங் கல்லூரிகளே அரசு கல்லூரிகளாகவும், தனியார் கல்லூரிகளாகவும் இருந்தன. அந்த நேரத்தில் தமிழக மாணவர்கள் இங்கு என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்றே என்ஜினீயரிங் படிப்புகளை படித்து வந்தனர். இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய படிப்பாக அது இருந்தது.

முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது இந்த நிலையை கண்ணுற்று, தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே என்ஜினீயரிங் படிக்க வசதியாக சுயநிதி கல்லூரிகளுக்கு அதாவது, தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு தாராள அனுமதி கொடுத்தார். இதனால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் தொடங்கப்பட்டன. மாணவ-மாணவிகளும் எளிதில் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.

படிப்பதோடு மட்டுமல்லாமல் படித்தவுடன் 'கேம்பஸ் இண்டர்வியூ' மூலம் கை நிறைய சம்பளத்துடன் வேலை என்ற நிலையிலும் மட்டுமல்லாமல், நிறைய வேலைவாய்ப்பு என்ற வகையிலும், என்ஜினீயரிங் படித்தவர்களின் வாழ்வு வளமாகியது. ஐ.டி. துறை வளர்ச்சி அடைந்ததால் அங்கும் வேலைவாய்ப்புகள் கை நீட்டி அழைத்தன. அங்கு போய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனால் கிராமங்களில் உள்ள பல ஏழைக் குடும்பங்கள் வசதி படைத்தவர்களாக மாறினார்கள். குடிசை வீடுகளெல்லாம் மாடி வீடுகளாகின.

இப்படியே போய்க் கொண்டு இருந்த நிலையில், இடைப்பட்ட காலத்தில் சற்று தொய்வு விழுந்தது. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்தது. ஆனால் இந்த நிலை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. இப்போது தொழில் வளர்ச்சி தமிழ்நாட்டிலும், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இப்போது வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதற்கு தகுந்த திறமையுள்ளவர்களுக்கு வேலையை கூப்பிட்டு கொடுக்கிறார்கள். மேலும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், ரோபோட்டிக்ஸ் போன்ற படிப்புகள் புதிதாக வந்துள்ளதால், அது தொடர்பான வேலைவாய்ப்புகளும் இருகரம் கூப்பி அழைக்கிறது.

என்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட வேலைகள் மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற வேலைகளைத் தரும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளிலெல்லாம் என்ஜினீயரிங் படிப்பில் சிறந்து விளங்கி, நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களே அதிக இடங்களில் தேறி வருகிறார்கள். ஆக என்ஜினீயரிங் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உதயமாகிவிட்டது. இதனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 463 கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதுவரை 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்களால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

அப்படி பார்க்கும்போது கல்லூரிகளில் இருக்கும் காலிஇடங்களைவிட கூடுதலாகவே விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மீண்டும் கிராக்கி தொடங்கிவிட்டது. மாணவர்களும் நன்றாக படித்து, கல்லூரிகளும் தரத்தை உயர்த்தினால் எதிர்காலம் மாணவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும். என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மவுசும் ஒருபோதும் குறையாது.

1 More update

Next Story