ரஷிய அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு : புதின் அமோக வெற்றி பெற வாய்ப்பு

ரஷிய அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. புதின் அமோக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷிய அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு : புதின் அமோக வெற்றி பெற வாய்ப்பு
Published on

மாஸ்கோ,

அதிபர் தேர்தல்

ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க களம் இறங்கி உள்ளார்.

அவருக்கு எதிராக பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் புதினுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு ஒரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

இந்த தேர்தலுக்காக ரஷியாவில் 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கு 11 வெவ்வேறு நேர மண்டலங்களிலும், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ரஷியாவுடன் உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைத்து 4-வது ஆண்டு விழா கொண்டாடுகிற தருணத்தில், இந்த அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

ரஷிய அதிபர் தேர்தலை பார்வையிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்து 400 நிருபர்கள் சென்று உள்ளனர்.

காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் ஆர்வமாக, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் 16.55 சதவீத ஓட்டுகள் பதிவானதாகவும், தொடர்ந்து விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

புதின் ஓட்டு போட்டார்

அதிபர் புதின், மாஸ்கோவில் கோசிகினா வீதியில் உள்ள ரஷிய அறிவியல் அகாடமியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

மாஸ்கோவில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள ஜெலனோடொல்ஸ்க் என்ற இடத்தில் தனது கணவர் அலெக்சியுடன் ஓட்டு போட்டு விட்டு வந்த கலினா ஜூகோவா என்ற ஓய்வூதியதாரர், நாங்கள் புதினுக்குத்தான் ஓட்டு போட்டோம். எங்களுக்கு எல்லாமே நன்றாக நடப்பதாகத்தான் தெரிகிறது. அவரைத் தவிர ஓட்டு போடுவதற்கு ஏற்ற நபர் யாரும் இல்லை என்று கூறினார்.

வெற்றி வாய்ப்பு

இதுதான் பெரும்பாலான வாக்காளர்களின் கருத்தாக அமைந்து இருப்பது புதினுக்கு சாதகமான அம்சம் ஆகும்.

அதே நேரத்தில் இந்த தேர்தலில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடக்கூடும் என புதின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

புதினுக்கு கடுமையான எதிர்ப்பாளராக உருவாகி வந்த அலெக்சி நாவல்னி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பு மக்களால் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த தேர்தலில் புதின் அமோக வெற்றி பெறுவார் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 9-ந் தேதி அங்கு நடந்த கருத்துக்கணிப்பில் புதினுக்கு 69 சதவீத ஆதரவும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பவல் குருதினினுக்கு 7 சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com