

பகு,
அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது. அந்த போரின் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் ரஷியாவின் தலையீட்டையடுத்து போர் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையில், போரின் போது அர்மீனிய படையினர் நாக்ரோனா-கராபாக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர். அந்த வெடியில் சிக்கி பல அசர்பைஜான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாக்ரோனா-கராபாக் மாகாணம் அசர்பைஜான் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதியில் அந்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நாக்ரோனா-கராபாக் மாகாணத்தின் ஹல்பஜார் மாவட்டத்தில் நேற்று அதிகாரிகள் வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அர்மீனிய வீரர்களால் போரின் போது புதைத்து வைக்கப்படடிருந்த கண்ணிவெடி மீது எதிர்பாராத வாகனம் ஏறியதால் அது வெடித்து சிதறியது.
இந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி அரசு செய்தி ஊடகத்தை சேர்ந்த 2 நிரூபர்கள் மற்றும் அதிகாரி ஒருவர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போரின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடி இருக்கும் இடங்களின் வரைபடத்தை ஒப்படைக்கும்படி அர்மீனியாவிடம் அசர்பைஜான் கோரிக்கை விடுத்துவருகிறது.
ஆனால், அந்த கோரிக்கையை அர்மீனியா நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.