ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை - தலீபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலீபான்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை - தலீபான்கள் அதிரடி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலீபான்களின் நிர்வாகம் அங்கு வந்து விட்டது.

தலீபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன. இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது.

இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலீபான்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும் என கூறி உள்ளார்.

பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலீபான்கள் கூறி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com