இஸ்ரேலுக்கு ஆதரவு - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு


இஸ்ரேலுக்கு ஆதரவு -  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 9 Sept 2025 10:57 AM IST (Updated: 9 Sept 2025 1:37 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமின் வடக்கு நுழைவாயில் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. அங்கு பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பஸ்சில் 2 பேர் ஏறினர். சற்று நேரத்தில் அங்கிருந்தவர்களை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதனை பார்த்ததும் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். அதன்பிறகே அங்கு அமைதி திரும்பியது.

காசா மீதான தாக்குதலுக்கு இயற்கையின் பதிலடி என ஹமாஸ் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேசமயம் தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஹமாஸ் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. எனவே மேற்கு கரை நகரமான ரமல்லாவை சுற்றியுள்ள பாலஸ்தீன கிராமங்களை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாக்குதல் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கினர். ஏற்கனவே இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போதைய இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை தூண்டுவதாக அமைந்தது.

இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக கருத்தினை பதிவிட்ட இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.




1 More update

Next Story