காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது

சனி கிரகத்தின் விந்தையான அதிசயங்கள் பல வெளிப்படுவதற்கு காரணமாக இருந்த காசினி விண்கலம் 20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய செயல்பாட்டை அடுத்தமாதம் நிறுத்துகிறது.
காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது
Published on

மெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலத்தை அனுப்பியது. காசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.

சனி கிரகத்தை சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காசினி விண்கலம், தனது கடைசி பயணத்தின் போது புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. காசினி விண்கலம் செயல்பாடு வரும் செப்., 15ம் தேதி முடிவுக்கு வருகிறது. தனது கடைசி பயணமாக, சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காசினி விண்கலம் செல்ல தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிகிரகத்தின் வடகோள பகுதியில், 22 முறை வலம் வர உள்ள காசினி கிரகம் மேலும் பல புதிய தகவல்களை அனுப்பும் என நாசா எதிர்பார்க்கிறது. சனி கிரகத்தின் விந்தையான அதிசயங்கள் வெளிப்படுவதற்கு காரணமாக இருந்த காசினி விண்கலம் 20 ஆண்டுகள் கழித்து தனது செயல்பாடை அடுத்த மாதம் 15 ந்தேதி நிறுத்துகிறது .

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத்திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு அதிகமாக உள்ளது. பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் சனியில் 82 கிலோ இருப்பார். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக் குறைவு. காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது. பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் இந்த கோளின் நடுப்பகுதியில் சுற்றி உள்ளது என்பது தான் இதன் சிறப்பு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com