நிலவில் நாசாவின் ஆதிக்கத்திற்கு சவாலாக களமிறங்க சீனா திட்டம்

அணு சக்தி உதவியுடன் நிலவில் விண்வெளி வீரர்களுக்கான தளம் ஒன்றை 6 ஆண்டுகளில் அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது.
Image Courtesy:  Bloomberg
Image Courtesy:  Bloomberg
Published on

பீஜிங்,

பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது.

இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி தொடர்ந்து வந்தது.

இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்ட ஆராய்ச்சியில் இறங்கியது. இதன் பயனாக, சமீபத்தில், ஆட்களின்றி ஆர்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதனுடன் இணைந்த ஆரியன் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது. எனினும், ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

விண்வெளி துறையில் நாசா அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்கு சவாலாக அடுத்த சில ஆண்டுகளில் தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டு உள்ளது.

இதன்படி வருகிற 2028-ம் ஆண்டுக்குள் தனது முதல் நிலவு தளம் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இந்த தளம், அணு சக்தி உதவியுடன் இயங்க கூடிய வகையில் இருக்கும் என்று கெய்க்சின் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தளத்தில், லேண்டர், ஹாப்பர், ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம் பெறும்.

இதுபற்றி சீனாவின் நிலவு பயண திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளரான வூ வெய்ரான் கூறும்போது, இன்னும் 10 ஆண்டுகளில் எங்களது விண்வெளி வீரர்கள் நிலவுக்கு பயணம் செய்ய முடியும்.

நிலவு நிலையத்தில் நீண்டகால மற்றும் அதிக சக்திக்கு தேவையான ஆற்றலை அணு சக்தி பூர்த்தி செய்யும் என்று சீனாவில் இருந்து வெளிவரும் அரசு தொலைக்காட்சியான சி.சி.டி.வி.யில் அளித்த பேட்டியில் வெய்ரான் கூறியுள்ளார்.

சமீப ஆண்டுகளாக, விண்வெளியில் தனது நோக்கங்களை செயல்படுத்தும் பணியில் தீவிரமுடன் சீனா ஈடுபட்டு வருகிறது. நிலவில் ஆராய்ச்சி பணி, சொந்த விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் செவ்வாய்க்கு செல்வதற்கான இலக்கு ஆகியவற்றை நிர்ணயித்து செயல்படுகிறது.

சீனாவின் திட்டம் அமெரிக்காவுக்கு நேரடி போட்டியாக காணப்படுகிறது. நாசா விண்வெளி அமைப்பு ஒன்றும் சளைத்ததல்ல. அது, செவ்வாய் கிரகத்தில் விண்கலம் ஒன்றை வைத்திருக்கிறது. இந்த தசாப்தத்திற்குள், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் நாசா திட்டமிட்டு உள்ளது.

நிலவில் மனிதர்களை இறக்குவது தவிர, நிலவின் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கான வளங்களை முதலில் பெறுவது அல்லது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவது என அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான தொகையை செலவிட்டு வருகிறது.

இதன்படி, 2019-ம் ஆண்டில் நிலவின் மறுபுறம் விண்கலம் அனுப்பிய முதல் நாடாக சீனா உருவானது. அதன்பின்னர், நிலவில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்த முதல் நாடு என்ற பெருமையையும் சீனா பெற்றது.

இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில், நீரை கண்டறிவதற்கான சிறந்த பகுதி என விஞ்ஞானிகள் நினைக்கும் பகுதியில் சீனாவின் நிலவு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாசா அமைப்பும் அந்த பகுதியை தனது இலக்காகவே வைத்துள்ளது. சீனாவின் இந்த தளம் பின்னர் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் ஆக விரிவாக்கம் செய்யப்படுவதற்கான இலக்கையும் சீனா கொண்டுள்ளது.

எது எப்படியோ, உலக நாடுகளில் ஏதேனும் ஒன்று, பூமி தவிர்த்து வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்தும் இலக்கு நிறைவேறினால், அது மனித குலத்தின் புதிய சாதனையாக பார்க்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com