இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க அரசியல் சட்ட திருத்த மசோதா: நாடாளுமன்ற சபாநாயகரிடம் எதிர்க்கட்சி சமர்ப்பித்தது

இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எதிர்க்கட்சி சமர்ப்பித்தது.
இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க அரசியல் சட்ட திருத்த மசோதா: நாடாளுமன்ற சபாநாயகரிடம் எதிர்க்கட்சி சமர்ப்பித்தது
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகக்கோரி அதிபர் அலுவலகம் அருகே நேற்று 13-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வரைவு அரசியல் சட்ட திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது. அதை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனேவிடம் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இத்தகவலை தெரிவித்தார். 1978-ம் ஆண்டில் இருந்து இலங்கையில் அதிபர் ஆட்சி முறை அமலில் உள்ளது.

சமகி ஜன பலவேகயா சமர்ப்பித்துள்ள மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக அரசியல் சட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் தலைவராகவும், முப்படை தலைவராகவும் அதிபர் நீடிப்பார். மற்றபடி, பிரதமரை நியமிக்கவோ, நீக்கவோ அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மந்திரிசபையின் தலைவராக பிரதமர் இருப்பார். பிரதமர் ஆலோசனையின்பேரில், மந்திரிகளை அதிபர் நியமிப்பார்.

அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் 20-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்து விட்டு, அதிபர் அதிகாரங்களை குறைக்கக்கூடிய 19-வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டின் பிரபலமான டாக்டர்கள், வக்கீல்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து டைரக்ஷன் ஸ்ரீலங்கா என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

அந்த அமைப்பு, அதிபரும், பிரதமரும் உடனடியாக பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால தேசிய அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களுடன் புதிய மந்திரிசபை அமைய வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியான ரம்புக்கானாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த ஊரடங்கு, நேற்று அதிகாலை 5 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. துப்பாக்கி சூட்டில் பலியானவர் பெயர் சாமிந்தா லக்ஷன் (வயது 41) என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தனது தந்தை, போராட்டக்காரர் அல்ல. பெட்ரோல் வாங்க சென்றபோது அவர் சுடப்பட்டதாக அவருடைய மகள் பியுமி லக்ஷானி கூறினார்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தை கேகலே மாவட்ட கலெக்டர் வாசனா நவரத்னே பார்வையிட்டார். சாட்சிகளை அச்சுறுத்த வேண்டாம் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சம்பவம் குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட தனிப்படையை அமைத்துள்ளதாக போலீஸ்தரப்பு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com