வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் - சீனா கவலை

வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் கவலை தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் - சீனா கவலை
Published on

பீஜிங்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து, அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருந்தாலும் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்திலேயே வடகொரியா, தனது எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு தடைவிதித்தது. இதன் மூலம் தங்கள் நாடு கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுக்க முடிந்ததாக வடகொரியா கூறுகிறது. ஆனாலும் சர்வதேச வல்லுனர்கள் வடகொரியாவிலும் கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக சீனாவுக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர், சீன அதிபர் ஜின்பிங்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

இந்த நிலையில், கிம் ஜாங் அன்னின் வாழ்த்து செய்திக்கு பதில் அளித்துள்ள ஜின்பிங், வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரசை எதிர்த்து போராட வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com