

கொழும்பு,
இலங்கையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு பெருகுவதை கட்டுப்படுத்த சுகாதார துறையினரால் பல்வேறு பணித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 1,860 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.
இலங்கையில் நகரங்களை பாதித்த டெங்கு காய்ச்சல் அடுத்தப்படியாக கிராமப் புறங்களிலும் பரவும் அபாயம் இருக்கிறது என்பதால் அதிக உடல் வலி , காய்ச்சல், வாந்தி , மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வரும் நாட்களில் நகர்ப்புற மற்றும் கிராமப் புற பகுதிகளில் டெங்கு மேலும் பரவும் அபாயம் இருப்பதாகவும் டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் நிலவும் பருவமழையுடன் கொசுக்களால் பரவும் நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தி உள்ளனர்.