

கீவ்,
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவி உள்ளது. அவற்றை பயன்படுத்தி, உலக நாடுகளில் கண்ணாடி இழை இல்லாமல் அகண்ட அலைவரிசை இணையவசதியை அளித்து வருகிறது.
இதற்கிடையே ரஷ்ய நாட்டு படையினரால் உக்ரைனில் இணைய சேவைகள் வழங்கி வந்த நிறுவனங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியுடன் முனையங்கள் அமைத்து தருமாறு அதன் நிறுவனர் எலான் மஸ்குக்கு உக்ரைன் துணை பிரதமர் மைகைலோ பெடரோவ் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று, .போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு எலான் மஸ்க் இணைய சேவை வழங்குவதாக அறிவித்தார். உக்ரைனில் ஸ்டார்லிங்க் மூலம் இணையவசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். இனிமேல், முனையங்களும் நிறுவப்படும் என்றும் கூறினார்.
எலான் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைசேவை அமைப்பான ஸ்டார்லிங்க் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடைமிர் ஜெலென்ஸ்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் வோலோடைமிர் ஜெலென்ஸ்கி வெலியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனுக்கு ஆதரவு காட்டிய அவருக்கு நான் வார்த்தைகளாலும் செயலாலும் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்..
தொடர்ந்து பேசிய அவ்ர், உக்ரைனில் சேதமடைந்த நகரங்களுக்காக அடுத்த வாரம் முதல், நாங்கள் ஸ்டார்லிங்க் இணைய சேவை அமைப்பின் உபகரணங்களின் அடுத்த தொகுப்பை வாங்க உள்ளோம் என்றார்.
மேலும், நாங்கள் இருவரும் உக்ரைனில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். போருக்கு பின்னர் அதை பற்றி தெரிவிப்பேன் என்று நகைச்சுவையாக கூறினார்.
முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்துக்கு வந்தடைந்த ஸ்டார்லிங்க் உபகரணங்களின் தொகுப்புகளை கீவ் நகர மேயர் விடாலி க்ளிட்ச்கோ காண்பித்தார்.
அதன்பின்னர் பேசிய அவர், இந்த உபகரணங்கள் கீவ் நகரின் முக்கிய உள்கட்டமைப்பு வேலைகளை பாதுகாப்பதற்கும் நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ரஷிய தாக்குதலுக்கு பின்னர், உக்ரைனின் பல நகரங்கள் இணைய சேவை மற்றும் போன் வசதி இல்லாமலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.