

பாரிஸ்
அதிபரின் தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதை எளிமைப்படுத்தும் சட்டங்களை மெக்ரானின் அரசு அடுத்தாண்டிலிருந்து அமல் செய்யப்போவதாக அறிவித்ததை அடுத்து போராட்டங்கள் எழுந்துள்ளன.
இப்போராட்டங்கள் இடதுசாரி கட்சித் தலைவர் மெலஞ்சனின் செல்வாக்கை உயர்த்துவதாகவும் கூறப்படுகிறது. அதிபர் தேர்தல் சமயத்தில் இதே போல மெலஞ்சனுக்கு செல்வாக்கு இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிபர் தேர்தலில் தன்னை வலதுசாரி, இடதுசாரி இரண்டிற்கும் பொதுவானவராக சொல்லி வந்த மெக்ரான் இப்போது வலதுசாரியாக மாறிவிட்டார் என்று எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்பவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சில கருத்துக்கணிப்புகள் மெலஞ்சன் மெக்ரானிற்கு வலுவான எதிர்ப்பாளராக இருப்பார் என்று கூறுகின்றன.
தற்போதைய சூழலில் ஏற்கனவே செல்வாக்கான கட்சிகளாக கருதப்பட்டவை பொலிவிழந்து காணப்படுகின்றன. இதனால் மெலஞ்சன், மெக்ரான் ஆகிய இருவருக்கு இடையேதான் போட்டி என்று கூறப்படுகிறது.
எனினும் மெலஞ்சன் மோசமான அதிபராக இருப்பார் என்று ஒரு கருத்துகணிப்பு கூறுகிறது. போராட்டங்களை கண்டு தனது முடிவிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்று மெக்ரான் அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.