’யுடியூப்’ தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பெண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனமான ‘யுடியூப்’ வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் புருனோ என்கிற இடத்தில் உள்ளது.
’யுடியூப்’ தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பெண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

வாஷிங்டன்,

யுடியூப் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவெளியின் போது அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, பெண் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அங்கு நுழைந்தார். அங்கு அவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. உடனே அவர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சிலர் அலுவலகத்தைவிட்டு வெளியேறி மறைவான இடங்களை தேடி சென்று பதுங்கினர்.

இருப்பினும் அந்த பெண் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யுடியூப் தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த பெண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து, படுகாயம் அடைந்த நபர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 36 வயதான ஆண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, யுடியூப் தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திவிட்டு, தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணின் பெயர் நசிம் அக்தம் (வயது 38) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல, சாதாரண காரணத்துக்காக நடந்ததுதான் என போலீசார் உறுதிபட தெரிவித்து உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்த தாக்குதலுக்கு வேதனை தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com